ஏராளமான இளம் வீரர்களின் வருகையாலும் ஃபார்ம் இல்லாமல் தவித்ததாலும் இர்ஃபான் பதான் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். 

ஐபிஎல் போட்டிகளில் ஆடிய இர்ஃபான் பதான் அதிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இர்ஃபான் பதான், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். 

அகாடமியை தொடங்கிவைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய இர்ஃபான் பதான், பஞ்சாப் நிறைய சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் பஞ்சாப்பில் கிரிக்கெட் அகாடமி தொடங்குவதற்கு பெருமை கொள்கிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விவகாரம், இன்னும் முடிவு காணப்படாத ஒன்றாக உள்ளது. ராகுல், ரெய்னா, ரஹானே, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களை கொண்டு பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே மிடில் ஆர்டரில் ஒரு இடத்தை பிடித்துவிட முடியும் என இர்ஃபான் பதான் நம்பலாம். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதான், இந்திய அணிக்கு சிறப்பான பங்காற்றியுள்ளார். 

2003ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இர்ஃபான் பதான், 2008க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அதேபோல 2012ம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. இர்ஃபான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் மற்றும் 120 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். 

ஏராளமான இளம் வீரர்களின் வருகையால் அணியில் இடத்தை இழந்த இர்ஃபான் பதான், தற்போது மீண்டும் அணியில் இடம்பெற முயற்சிப்பதாக கூறியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. எனினும் இந்திய அணியில் தற்போது இருக்கும் அதிகமான இளம் திறமைகளுக்கு மத்தியில் இர்ஃபான் பதானின் முயற்சி கைகொடுக்கிறதா என்பதை பார்ப்போம்.