ஐ.பி.எல். என அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 தொடர்,இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.தற்போதைய கிரிக்கெட் உலகில் முதன்மையான உள்ளூர் தொடராக வலம் வரும் ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற நிலையில், 12-வது சீசனை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என்ற குழப்பத்தில் பிசிசிஐ., சிக்கியுள்ளது.

2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால் பாதுகாப்பு வசதிகளில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். தேர்தல் ஆணையமும் கால அட்டவணையை இன்னும் தெரிவிக்கவில்லை.கால அட்டவணையை ஆராய்ந்த பின்னரே ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்துவதா?வெளிநாடுகளில் நடத்துவதா? என்ற இறுதி முடிவை எடுக்க முடியும்.

ஐ.பி.எல் தொடரை வெளிநாடுகளில் முழுமையாக நடத்த வேண்டும் என்ற நிலை உருவானால் தென் ஆப்பிரிக்கா தான் முதல் தேர்வாக இருக்கும்.பாதி ஆட்டங்களை வெளியே கொண்டு சென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்தில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், இங்கிலாந்தில் ஐ.பி.எல்தொடரை நடத்த பெரும் பொருட்செலவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதனால் இங்கிலாந்திற்கு ஐ.பி.எல் வாய்ப்பு குறைவு தான். இது சிறிய சிக்கல் என்றாலும் மற்றொரு சிக்கலும் உள்ளது.மே 30-ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை (50 ஓவர்) தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக ஐபிஎல்., தொடரை முடிக்க வேண்டும்.

அதனால், வழக்கமான ஏப்ரல் முதல் வாரத்துக்கு பதிலாக,மார்ச் இறுதிவாரத்தில் ஐபிஎல்., தொடர் கண்டிப்பாக துவங்க வேண்டும்.ஆனால் பொதுத்தேர்தல் தேதி தெரியாத காரணத்தால் ஐபிஎல் எப்போது என்பது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் உள்ளது.

 இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு பிசிசிஐ ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தினாலும் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் களமிறங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.