கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 4-5 மாதங்களுக்கு எந்த விளையாட்டு போட்டிகளும் நடக்காமல் இருந்தது. அதன்பின்னர் ஜூன், ஜூலை மாதங்களிலிருந்து கிரிக்கெட் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கின. பின்னர் கால்பந்து போட்டிகளும் நடக்க தொடங்கின. ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்போது டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. இந்நிலையில், ஹாக்கி போட்டிகளும் மீண்டும் தொடங்கவுள்ளன. அடுத்த ஆண்டு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில்,  கிட்டத்தட்ட ஓராண்டாக எந்த போட்டியிலும் ஆடிராத இந்திய மகளிர் ஹாக்கி அணி, வரும் ஜனவரி 3ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு செல்கிறது.

வரும் ஜனவரி 3ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு புறப்பட்டு செல்லும் இந்திய மகளிர் ஹாக்கி அணி, அர்ஜெண்டினாவுடன் 8 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜனவரி 17ம் தேதி முதல் போட்டி நடக்கிறது. இந்த தொடரில் ஆடுவதற்காக 25  வீராங்கனைகள் மற்றும் 7 சப்போர்ட் ஸ்டாஃப்களும் டெல்லியிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு ஜனவரி 3ம் தேதி புறப்பட்டு செல்கின்றனர்.