அடுத்தடுத்த டி20 போட்டிகளில் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் ஆட வாய்ப்பளிக்கப்படும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து அணியுடன் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் இந்திய அணி, இதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்று, அந்த அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. 

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்களின் அதிரடியால் இந்திய அணி 208 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கே இவர்கள் 16 ஓவர்கள் ஆடியதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 

களத்திற்கு வந்தவுடனே அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ரெய்னா, தோனி ஆகியோர் பதின் ரன்களில் வெளியேறினர். கோலி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அயர்லாந்தை 132 ரன்களுக்கே சுருட்டி இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சிறப்பாக ஆடினார்கள். அவர்களின் பேட்டிங்கால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. தோனியும் ரெய்னாவும் கூட நன்றாக ஆடினர். பவுலர்களும் சிறப்பாக பந்துவீசினர்.

மிடில் ஆர்டரில் சில சோதனை முயற்சிகளை செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். அடுத்தடுத்த போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்படும். எதிரணிக்கு ஆச்சரியமளிக்க கூடிய வகையில் வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவர். பல நேரங்களில் அணியில் இடம்பெறும் அனைத்து வீரர்களுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த முறை அனைத்து வீரர்களுக்கும் ஆட வாய்ப்பளிக்கப்படும். தேவைக்கேற்றவாறு வீரர்கள் களமிறக்கப்படுவர். 

அனைத்து வீரர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்குவதன் மூலம் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும். அனைத்து வீரர்களுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற அணி நிர்வாகத்தின் முடிவுக்கு வீரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என கோலி தெரிவித்தார். 

இதன்மூலம் முதல் டி20 போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிடில் ஆர்டரில் எந்த வீரருக்கும் நிரந்தரமாக ஆட வாய்ப்பு கிடைக்காது. மிடில் ஆர்டரில் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் பரிசோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.