ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து அணியை கண்டு சற்றும் அசராத இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரிஸ்ட் ஸ்பின்னர்களை வைத்து இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என நம்புகிறார்.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து. நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முற்றிலுமாக இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. எஞ்சிய ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா வெல்வதற்கு வாய்ப்பில்லை. அந்தளவிற்கு இங்கிலாந்து அணி நல்ல ஃபார்மில் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்து அணி, இந்தியாவுடன் ஆடுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்தை கண்டு இந்திய அணி சற்றும் அசரவில்லை என்பதை கேப்டன் விராட் கோலியின் பேச்சிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹலும் குல்தீப்பும் மிரட்டுவார்கள் என கோலி நம்புகிறார். 

இதுதொடர்பாக பேசியுள்ள கோலி, நம் அணி ஆஸ்திரேலியாவை போன்றது அல்ல. நம் அணியில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள். சாஹலும் குல்தீப்பும் போட்டின் முடிவை தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பர் என கோலி தெரிவித்துள்ளார். 

சாஹல் மற்றும் குல்தீப்பின் ஸ்பின் பவுலிங்கின் மீது கோலி அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என வென்றது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் இருவரும் தான். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக முடக்கினர். 6 போட்டிகளில் சாஹலும் குல்தீப்பும் மட்டுமே 33 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஒருநாள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இங்கிலாந்தும் இந்தியாவும் மோதும் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.