தோனியின் மந்தமான ஆட்டமே இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ற விமர்சனத்துக்கு இந்திய அணி கேப்டன் கோலி பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க வீரர்கள் ராய் மற்றும் பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இயன் மோர்கன் அரைசதம் கடந்து அவுட்டானார். கடந்த போட்டியில் கைகொடுத்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இந்த போட்டியில் சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய வில்லி அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடி, இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவிய ஜோ ரூட் சதமடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 322 ரன்களை குவித்தது. 

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினார். ஆனால் கடந்த முறை சதமடித்த ரோஹித் சர்மா, 15 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ஷிகர் தவான், 36 ரன்களிலும் ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். 

நல்ல ஃபார்மில் இருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் அடுத்தடுத்து வெளியேறியது. இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன்பிறகு கோலியும் ரெய்னாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினாலும், அவர்கள் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய தோனி, இலக்கை விரட்டுவதற்கான ஆட்டத்தை ஆட முற்படவேயில்லை. இலக்கை அடைய தேவையான ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தோனியும் அவுட்டாக, குல்தீப்பும் சாஹலும் 50 ஓவர் வரை ஆடினர். கடைசி பந்தில் சாஹல் 12 ரன்னில் அவுட்டனார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டை தொடருவதற்கோ அல்லது குறைப்பதற்கோ தோனி முயற்சி செய்யவில்லை. தோனியின் மந்தமான ஆட்டம்தான் படுதோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. 

போட்டிக்கு பிறகு இதுதொடர்பாக பேசிய கேப்டன் கோலி, தோனி சரியாக ஆடாத போதெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே அவர் சிறப்பாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால் பெஸ்ட் ஃபினிஷர் என்று புகழ்கின்றனர். வெற்றிகரமாக முடிக்கவில்லை என்றால் விமர்சனங்கள் பாய்கின்றன. அது சரியல்ல. இன்றைய அவருக்கு மட்டுமல்ல; மொத்த அணிக்கே சரியாக அமையவில்லை என கோலி தெரிவித்தார்.