துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வளரிவனும், வில்வித்தை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரியும் தங்கம் வென்று அசத்தினர்.

உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளில் மகளிர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றார். 

24 ஷாட்களில் 251.7 புள்ளிகள் பெற்று சீனாவின் ஸெரு வாங்கை வீழ்த்தி இளவேனில் தங்கம் வென்றார். இது அவர் வெல்லும் இரண்டாவது தங்கமாகும். 

இந்தப் போட்டியில் இந்தியா மூன்று தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

அதேபோன்று, அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கம் வென்றார்.

மகளிர் ரெக்கர்வ் பிரிவில் ஜெர்மனியின் மிச்சேல் கிராப்பெனை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தீபிகா குமாரி தங்கம் வென்றார். இதன்மூலம் ஆண்டு இறுதியில் நடக்க உள்ள சர்க்கியூட் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.