14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன.  சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நேற்று  முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது.

போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது சொயிப் மாலிக் பவுண்டரி லைனில் நின்றார். சொயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர், இந்தியாவின் மருமகன்.

 இந்தியா, பாகிஸ்தான் போட்டியென்றால் களத்தில் மட்டும் அனல் தெறிக்காது சமூக வலைதளங்களிலும் மோதல் இருக்கும். இருதரப்பும் மோதவிருந்த நிலையிலே சமூக வலைதளங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு சானியா  மிர்சா வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் இந்திய – பாகிஸ்தான்  போட்டியின் போது சொயிப் மாலிக்கை  ரசிகர்கள் மாமா, மாமா என்று அழைத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள். ரசிகர்கள், ஜிஜூ, ஜிஜூ இங்க பாருங்க, உங்களைதான் அழைக்கிறோம். வீட்டில் அக்கா நலமா? என்று நலம் விசாரிக்கிறார்கள்.

ஜிஜூ என்றால் அக்காவின் கணவர் முறையாகும். அக்காவின் கணவர் என்று சொயிப் மாலிக்கை இந்திய ரசிகர்கள் உரிமையோடு அழைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மாமா, என்று அழைக்கும் போது பவுண்டரி லைனில் நிற்கும் சோயிப் மாலிக் தன்னுடைய கையை உயர்த்தி அசைத்து பதிலுக்கு மரியாதை செய்கிறார் சொயிப் மாலிக்.