இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டனான ஹர்மன்பிரீத் கௌர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை கொடுத்து டி.எஸ்.பி ஆகியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்தவர் ஹர்மன்பிரீத் கௌர். இவர் கடந்தாண்டு ஐசிசியின் பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியின்போது சிறப்பாக விளையாடியதால் அர்ஜுனா விருதை பெற்றார். 

இதன்மூலம் அவருக்கு மேற்கு இரயில்வே துறையில் வேலை கொடுக்கப்பட்டது. அதனை வேண்டாம் என்று மறுத்த கௌர்க்கு பஞ்சாப் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில டிஜிபியாக உள்ள சுரேஷ் அரோராவும் ஹர்மன் பிரீத்துக்கு டி.எஸ்.பி பதவியினை வழங்கினர். 

இதற்கான சான்றிதழ் சரிபார்பதற்காக ஜலந்தரில் உள்ள பஞ்சாப் ஆயுத படை காவலாளர்கள் மீரட்டில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதில் அந்த சான்றிதழில் உள்ள பதிவு எண் போலியானது என்று தெரியவந்தது. 

இதனால் ஹர்மன்பிரீத் கௌர் டி.எஸ்.பி பதவி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஹர்மன்பிரீத் கௌர் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.