நான் சமையலறையிலேயே இருந்திருந்தால் பதக்கம் வென்றிருக்க முடியுமா? சாய்னா நேவால் கேள்வி!
பெண்கள் சமையலறையில் இருக்க வேண்டும் என்று பேசிய காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ ஷாமனூர் சிவசங்கரப்பாவிற்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. ஷாமனூர் சிவசங்கரப்பா. இவர், பெண்கள் பற்றி இழிவாக பேசிய சர்ச்சை கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் தாவணகரே நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சித்தேஸ்வராவின் மனைவி காயத்ரி சித்தேஸ்வரா என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
கர்நாடகா தாவணகரே நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தின் போது பேசிய ஷாமனூர் சிவசங்கரப்பா, இங்குள்ள பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? நாம் இந்த பகுதிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். கடுமையாக பாடுபட்டிருக்கிறோம். அதுவே நமக்கு வெற்றி தேடித் தரும். ஆனால், அவர்களுக்கு என்ன தெரியும்? சமையல்கட்டின் நின்று கொண்டு சமையல் செய்ய மட்டுமே தெரியும். அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்பது போன்று பேசியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான் இது குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விளையாட்டு மைதானத்தில் நான் நாட்டிற்காக பதக்கங்களை வென்ற போது, நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியிருக்கும்? எல்லா பெண்களும் தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் போது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பிரதமர் மோடியின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நாரி சக்தி கா அப்மான் மற்றும் பெண் வெறுப்பு கொண்டவர்கள்.. உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.