இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். இதனால் இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

பட்லர் 34 ரன்களும், ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஹேல்ஸ் 30 ரன்களும்,  மோர்கன் 6 ரன்களும், , ஸ்டோக்ஸ்  14 ரன்களும், , பேர்ஸ்டோவ் 25 ரன்களும் எடுத்தனர். இந்த 4 விக்கேட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்தில்  198 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் 5 ரன்களில் அவுட்டாகி  முதல் அதிர்ச்சி அளித்தார். லோகேஷ் ராகுல் 19 ரன்களில் அவுட்டாகி அவரும் அதிர்ச்சி அளித்தார்.

மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடினார். அவர் டி20 போட்டிகளில் மூன்றாவது சதமடித்து அசத்தினார். அவருக்கு கோலி ஒத்துழைப்பு கொடுத்தார். கோலி 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரோகித்துடன் சேர்ந்து அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

இறுதியில், இந்தியா 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வென்றது. ரோகித் சர்மா 100 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார். அத்துடன் தொடரையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது.