இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளதால், போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

கடந்த 2007ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. அதன்பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ம் ஆண்டு 0-4 எனவும் 2014ம் ஆண்டு 1-3 எனவும் டெஸ்ட் தொடரை இழந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்தது. 

இந்நிலையில், கடந்த இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு, கோலி தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் இங்கிலாந்து அணி 5வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என முன்னாள் ஜாம்பவான்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் பலமாக விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பர். குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில் இங்கிலாந்தை பொறுத்தவரை ஜோ ரூட், அலெஸ்டர் குக், பேர்ஸ்டோ, ஆண்டர்சன் ஆகிய அனுபவ வீரர்கள் அந்த அணியின் பலமாக இருப்பர். 

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இறங்குவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் 1000வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.