இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிவருகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், வெற்றியின் விளிம்பு வரை சென்று இந்திய அணி தோல்வியை தழுவியது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நேற்று முழுவதும் மழை பெய்ததால் முதல் நாள் போட்டி ரத்தானது. இன்று டாஸ் போடப்பட்டது. டாஸ்  வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. 

இந்த போட்டியில் தவான் நீக்கப்பட்டு புஜாராவும், உமேஷ் யாதவிற்கு பதிலாக குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்களாக முரளி விஜயும் ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரின் 5வது பந்திலேயே முரளி விஜயை டக் அவுட்டாக்கினார் ஆண்டர்சன். இதையடுத்து ராகுலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ராகுல் 8 ரன்களில், ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

10 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இதையடுத்து புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலியும் புஜாராவும் தலா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். 6.3 ஓவருக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.