இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 287 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடிவருகின்றனர். விஜயும் தவானும் நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்களையும் சேர்த்தும் ஆடிவருகின்றனர். 

ஆண்டர்சன் வீசிய 3வது ஓவரின் 5வது பந்து முரளி விஜயின் கால் காப்பில் பட்டது. இங்கிலாந்து வீரர்கள் பெரும் சத்தத்துடன் அம்பயரிடம் அப்பீல் செய்ய அம்பயர் அவுட் இல்லை என்று கூறிவிட்டார். ஆண்டர்சன் சந்தேகத்துடன் அதிருப்தியில் இருந்தார். சற்றும் யோசிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆர்வக்கோளாறில் ரிவியூ கேட்டார். ஆனால் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே செல்வது ரிவியூவில் உறுதியானதால் முரளி விஜய் அவுட் இல்லை. இங்கிலாந்து ஒரு ரிவியூவை இழந்துவிட்டது. 

இதையடுத்து முரளி விஜயும் தவானும் தொடர்ந்து ஆடிவருகின்றனர். 8 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது.