முதல் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 84 ரன்களே தேவை என்பதால் நான்காம் நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி தனி நபராக போராடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அஷ்வின் சுழலில் முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்பிறகு அடுத்த நான்கு விக்கெட்டுகளை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இஷாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 194 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் முரளி விஜய், தவான், ராகுல், ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அஷ்வின் 13 ரன்களில் அவுட்டானார். 

முதல் இன்னிங்ஸை போலவே ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலைத்து ஆடிவருகிறார். விராட் கோலியும் தினேஷ் கார்த்திக்கும் ஆடிவருகின்றனர். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 43 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

வெற்றிக்கு இன்னும் 84 ரன்களே தேவை என்பதால் நான்காம் நாளான இன்று போட்டி முடிந்துவிடும். முதல் இன்னிங்ஸில் சதமடித்து கடைசி விக்கெட்டாக அவுட்டான விராட் கோலியை, இரண்டாவது இன்னிங்ஸிலும் வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிவருகின்றனர். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்திய அணியின் பேட்டிங் விராட் கோலியை மட்டும் சார்ந்திருப்பது நல்லதல்ல.