இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 285 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 287 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் சிறப்பாக ஆடினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு இருவரும் ஆடிவந்தனர். இந்திய அணி நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது சாம் குரான் பிரேக் கொடுத்தார். 

முரளி விஜயை 20 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அதன்பிறகு களமிறங்கிய ராகுல், முதல் பந்தில் பவுண்டரி அடித்து, இரண்டாவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இதையடுத்து ஷிகர் தவானும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 26 ரன்களில் அவுட்டானார்.

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. கோலியும் ரஹானேவும் ஆடிவருகின்றனர். உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 76 ரன்கள் எடுத்துள்ளது.