இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதை தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இப்போட்டியில், கேப்டன் விராத் கோலி 6 ரன்களை சேர்த்த போது, டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த வீரர் என்ற மற்றொரு சாதனையை சொந்தமாக்கி கொண்டார். தனது 70வது டெஸ்ட் போட்டியில், 119வது இன்னிங்ஸில், கோலி இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

அத்துடன், 6000 ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில், கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். 117 இன்னிங்ஸில் கவாஸ்கர், இச்சாதனையை செய்தார். சச்சின் (120 இன்னிங்க்ஸ்), சேவாக் (123), டிராவிட் (125) ஆகியோரும் முறையே அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.

அதேபோல், டெஸ்ட் போட்டியில் முதல் ஆயிரம் ரன்களை எடுக்க, விராத் கோலிக்கு 27 இன்னிங்க்ஸ் தேவைப்பட்டது. தற்போது, 5000 ரன்களில் இருந்து 6000 ரன்களை எட்ட, அவருக்கு 14 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.