அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடிவருகிறது. இதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித்தும் தவானும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அயர்லாந்து அணி திணறியது.

அரைசதம் கடந்த பிறகு மேலும் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை அயர்லாந்து வீரர்கள் தவறவிட்டனர். ஆனால் 74 ரன்களில் தவான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தவானை வெளியேற்றினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்களை குவித்தது. அதன்பிறகு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரெய்னா, 11 ரன்களில் வெளியேறினார். 

சதத்தை நெருங்கிய ரோஹித், சதத்தை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக கடைசி ஓவர்களில் நிதானமாக ஆடினார். எனினும் அவரால் சதமடிக்க முடியவில்லை. 97 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

கடைசி ஓவரில் தோனி, ரோஹித், கோலி ஆகியோர் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகள். தோனி 10 ரன்களிலும் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். எனினும் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாச, இந்திய அணி 208 ரன்களுடன் இன்னிங்ஸை நிறைவு செய்தது. 

209 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திணறினர். தொடக்க வீரர் ஜேம்ஸ் ஷேனானை தவிர மற்ற வீரர்கள் யாருமே சோபிக்கவில்லை. தொடக்க வீரர் ஸ்டிர்லிங் 1 ரன்னில் வெளியேறினார். பால்பிரின், சிபி சிங், கேரி வில்சன், கெவின் ஓ பிரைன், தாம்சன் பாயிண்டர், டாக்ரெல் ஆகியோர் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஷேனான் மட்டும் 60 ரன்கள் குவித்து அவுட்டானார். சீரான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.