அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 200 ரன்களை கடந்த இந்திய அணி, முதல்முறையாக ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் ஆடியது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அதிரடியால் இந்திய அணி, 208 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் ஆடாத ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு இரண்டாவது டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ராகுல், ரெய்னாவின் அபார அரைசதங்கள் மற்றும் கடைசி நேர பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணின் 213 ரன்கள் குவித்தது. பிறகு அயர்லாந்து அணியை 70 ரன்களில் சுருட்டி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் 208 ரன்கள் குவித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 213 ரன்களை குவித்தது. தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் 200 ரன்களை கடப்பது இதுவே இந்திய அணிக்கு முதல்முறை. இதற்கு முன்னதாக அடுத்தடுத்த இரண்டு டி20 போட்டிகளில் 200 ரன்களை கடந்ததில்லை. 

மேலும் நேற்று அடித்த 213 ரன்கள் தான் இந்திய அணியின் நான்காவது அதிகமான டி20 ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.