இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப்பின் அசத்தலான பவுலிங், ரோஹித்தின் அதிரடி சதம் ஆகியவற்றால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய விரும்பியதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ ஆகிய இருவரும் தலா 38 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்த போதிலும் அதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயன் மோர்கன் ஆகியோர் சோபிக்க தவறி முறையே 3 மற்றும் 19 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

ஸ்டோக்ஸ் 50 ரன்களிலும் பட்லர் 53 ரன்களிலும் வெளியேறினர். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிய அந்த அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அசத்தலாக பந்துவீசிய குல்தீப் யாதவ், 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினர். அதிரடியாக ஆடிய தவான், 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பதம்பார்த்தது. ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா, பிறகு அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவிட்டார். 

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 167 ரன்களை குவித்தது. கோலி 75 ரன்களில் அவுட்டானார். ரோஹித்துடன் ராகுல் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி சதம் கடந்த ரோஹித் சர்மா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 137ரன்களை குவித்தார்.

ரோஹித், கோலியின் அதிரடியால் 40.1 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.