இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல், டாஸ் போடும் முன்னரே கசிந்ததாக தெரிகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்த இரண்டாவது போட்டியின், முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடப்படவில்லை.

அதனால் இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையே டாஸ் கூட போடப்படாத நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் கசிந்துள்ளதாக தெரிகிறது. டுவிட்டர் பக்கம் ஒன்றில், ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் வீரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் உள்ளது. 

அதன்படி, முதல் போட்டியில் ஆடிய இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. புஜாரா முதல் போட்டியில் சேர்க்கப்படாடதது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், இந்த லீக்கான லிஸ்டின் அடிப்படையில் இதிலும் புஜாரா இல்லை. இந்த பட்டியல் உண்மை என்றால், கோலியின் கேப்டன்சியில் அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணி ஆடுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.