இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது. 

இங்கிலாந்தில் இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியதால் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டாம் கோலரை 5 ரன்களில் வெளியேற்றினார் தீபக் சாஹர். மற்றொரு தொடக்க வீரரான நிக் கபின்ஸும் 12 ரன்களில் அவுட்டானார். 

அதன்பிறகு ஜோடி சேர்ந்த சாம் ஹெய்ன் மற்றும் லிவிங்ஸ்டோன், இந்திய அணியின் பந்துவீச்சை சாதுர்யமாக சமாளித்து ஆடினர். தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை அதிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடி அரைசதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 153 ரன்களை குவித்தனர். 

83 ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஃபோக்ஸ், முல்லனே, டாசன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஹெய்ன், சதமடித்தார். 108 ரன்களில் ஹெய்ன் சாஹரின் பவுலிங்கில் அவுட்டானார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து லயன்ஸ் அணி. 

265 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 15 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு மயன்க் அகர்வாலுடன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். கில் 20 ரன்களில் வெளியேற, அகர்வாலும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் - விஹாரி ஜோடி நிதானமாக ஆடி அணியை மீட்டெடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களிலும் விஹாரி 37 ரன்களில் அவுட்டாகினர். 

அதன்பிறகு ரிஷப் பண்ட்டுடன் குருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பொறுப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி இழுத்து சென்றனர். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடிய இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். 

ரிஷப் பண்ட் 64 ரன்களும் குருணல் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். 48.2 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.