தீபக் சாஹரின் அசத்தலான பவுலிங் மற்றும் மயன்க் அகர்வாலின் அபார சதத்தால் இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி, இங்கிலாந்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இரண்டு பயிற்சி போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சொதப்பலாக பேட்டிங் ஆடியதால், இங்கிலாந்திடம் தோல்வியடைந்தனர். 

அதேபோல வெஸ்ட் இண்டீஸும் இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 

எனவே இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் பேட்டிங் வரிசையை இந்தியாவின் தீபக் சாஹர் சரித்தார். 

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே தொடக்க வீரர் பிளாக்வுட்டை வீழ்த்தினார் சாஹர். அதன்பிறகு சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. ஹேம்ராஜ் 45 ரன்களும், தாமஸ் 64 ரன்களும் எடுத்தனர். அவர்களை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி 49.1 ஓவருக்கு 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

222 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.

அதிரடியாக தொடங்கிய பிரித்வி 27 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து அகர்வாலுடன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கியது. இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திணறினர். 

அதிரடியாக ஆடி சதமடித்த அகர்வால், 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் வெளியேறினார். கில்லும் ரிஷப் பண்ட்டும் இணைந்து அணியை வெற்றி பெற செய்தனர். அரைசதம் கடந்த கில், 58 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

38.1 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.