இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இங்கிலாந்து சென்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி, முத்தரப்பு தொடரில் ஆடிவருகிறது. இன்று இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. 

இதற்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, அபார வெற்றியை இந்தியா ஏ அணி பதிவு செய்தது. அந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலுமே இளம் வீரர் பிரித்வி ஷா, சிறப்பாக ஆடினார். ஒரு போட்டியில் 70 ரன்களும் மற்றொரு போட்டியில் சதமும் அடித்தார். அதேபோல இரண்டாவது பயிற்சி போட்டியில் மயன்க் அகர்வால் சதமடித்தார். அதே போட்டியில் ஷூப்மன் கில், 86 ரன்கள் அடித்தார். 

இவ்வாறு இரண்டு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக இளம் வீரர்கள், இன்றைய போட்டியில் சற்று சொதப்பிவிட்டனர்.

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். 

இரண்டு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா, 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். மயன்க் அகர்வாலும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 37 ரன்களில் வெளியேறினார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர்.

25 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களுடன் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் ஆடிவருகின்றனர்.