இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. பயிற்சி போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்தியா ஏ அணி வீரர்கள் இந்த போட்டியில் சொதப்பினர். 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி, இங்கிலாந்து சென்று முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடன் இன்று முதல் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். 

இதற்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா, 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். மயன்க் அகர்வாலும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 37 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

ஷ்ரேயாஸ் - ரிஷப் ஜோடி நம்பிக்கை அளித்தது. அந்த நம்பிக்கையும் நிலைக்கவில்லை. ஷ்ரேயாஸ் 42 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், அரைசதம் கடந்து 64 ரன்களில் அவுட்டானார். களத்திற்கு வந்த முதல் பந்திலேயே அவுட்டாகி விஜய் சங்கர் அதிர்ச்சியளித்தார். அக்ஸர் படேலும் தீபக் சாஹரும் சிறிது நேரம் நிலைத்து ஆடி, ஓரளவிற்கு ரன்களை சேர்த்தனர்.

ஆனாலும் 46.3 ஓவரிலேயே 232 ரன்களுக்கு இந்திய ஏ அணி ஆல் அவுட்டாகியது. பயிற்சி போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன் குவித்த இளம் வீரர்கள், இந்த போட்டியில் சொதப்பிவிட்டனர்.