பந்தை சேதப்படுத்துதல், நடுவரின் பேச்சை மதிக்காதது, தனிப்பட்ட முறையில் வீரர்களை திட்டுவது ஆகிய வீரர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு தண்டனையை கடுமையாக்குகிறது ஐசிசி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரத்தில், பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட், அணி கேப்டன் ஸ்மித் ஆகியோருக்கு தண்டனை விதித்த ஐசிசி, அதற்கு காரணமாக இருந்த வார்னர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐசிசி விதிமுறைகளின்படி, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஐசிசி தெரிவித்தது. ஆனால் ஸ்மித்துக்கு 2 தடைப்புள்ளிகள் வழங்கப்பட்டு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்டுக்கு 75% ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

ஆனால் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்தது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது ஒருபுறமிருக்க, ஐசிசியின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, விதிமுறைகளை சீர்திருத்த வேண்டிய கட்டாயம் உருவானது. 

இதையடுத்து கடந்த மே மாத இறுதியில் அனில் கும்ப்ளே தலைமையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு விவாதங்கள் நடந்தன. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, விதிமீறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல நடுவரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து எதிர்த்து செயல்படும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்நிலையில், பந்தை சேதப்படுத்துதல், வீரர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது, கெட்ட வார்த்தை பேசுவது, நடுவரின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்படாதது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்கு கடுமையான விதிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. 

அதன்படி, பந்தை சேதப்படுத்துவதை மூன்றாம் நிலை குற்றமாக கருதி, அதற்கு 12 தடை புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. 12 தடை புள்ளிகள் வழங்கப்பட்டால், 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் ஆட முடியாது. ஏற்கனவே பந்தை சேதப்படுத்துவதற்கு தண்டனையாக 2 தடைப்புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு தண்டனைகள் கடுமையாக்கப்படுவதால் வீரர்கள் சற்றே கலக்கமடைந்துள்ளனர்.