உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய பெண்கள் மத்தியில் மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் இதுவரை குரூப் 8 பிரிவுகளையும் சேர்த்து முதற்கட்டமாக 26 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 16 அணிகள் வென்று நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

இந்தியாவில் இருக்கும் தொலைக்காட்சிகளில் இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், வங்காளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பப்பட்டன. இதனால் பார்வையாளர் எண்ணிக்கை வழக்கத்தை விட 46 சதவீதம் கூடியுள்ளது. 

மேற்கு வங்கம், கேரளம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் பேர் உலக கோப்பை போட்டியை கண்டு ரசித்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் மொத்தம் 1 கோடி பார்வையாளர்கள் இதனை கண்டுள்ளனர் என்றும் அதில் பாதி பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த தகவலை உலகக் கோப்பை போட்டியை அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான சோனி தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்களில் முதலிடம் பெற்றுள்ளது. தற்போது கால்பந்து போட்டிக்கும் பெண்கள் மத்தியில் மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.