ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதை அடுத்து கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தோஹாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். 

கோமதி மாரிமுத்துவிற்கு போட்டியின் போது எடுக்கப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட பரிசோதனை முடிவில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தனது வாழ்வில் தான் ஊக்கமருந்து உட்கொண்டதே இல்லை என்று கோமதி மாரிமுத்து தன்மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தனது “B” மாதிரியையும் பரிசோதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். B மாதிரியை பரிசோதித்தால் தான் ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை என்பது தெரியும் என்கிற ரீதியில் கோமதி, அதை பரிசோதிக்குமாறு கோரியுள்ளார். 

இதற்கிடையே கோமதி மாரிமுத்துவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவேளை B மாதிரியை பரிசோதனை முடிவிலும் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதோடு அவர் பெற்ற தங்கப்பதக்கமும் வாபஸ் பெறப்படும். தற்போது 30 வயதாகும் கோமதி மாரிமுத்துவுக்கு நான்காண்டுகள் தடை விதிக்கப்பட்டால், அத்துடன் அவரது தடகள எதிர்காலமே முடிவுக்கு வந்துவிடும் அபாயம் உள்ளது.