சில தினங்களுக்கு முன்பு திரையுலக பிரமுகர்களாலும் அரசியல் கட்சியினராலும் பெருமளவு கொண்டாடப்பட்டு நிதி உதவியும் வழங்கப்பட்ட கோமதி மாரிமுத்து போதை மருந்து உட்கொண்ட சர்ச்சையில் சிக்கி இருப்பதாகவும் அவரது தங்கப்பதக்கம் விரைவில் பறிக்கப்படக்கூடும் என்றும் பகீர் தகவல்கள் வருகின்றன.

கத்தார், தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார். 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 விநாடிகள் நேரத்தில் வந்து முதலிடம் பிடித்த அவரை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாகப்  பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தோஹாவில் நடைபெற்ற  ஆசிய போட்டியில் கோமதி மாரிமுத்து அனபாலிக் நார்ஆண்ட்ரோஸ்டெரோன் என்ற மருந்தை எடுத்துக் கொண்டதால்  ஊக்க மருந்து சோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று தெரிய வந்ததாகவும் இதனால் கோமதிக்கு 4 வருட காலம் தடை விதிக்கப்படும் என்றும்  அவர் வாங்கிய தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும்  என்றும் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் அவருக்கு தற்போது  தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. போலந்து ஸ்பாலாவில் முகாமில் கலந்து கொள்ளவிருந்த கோமதி மாரிமுத்துவின் விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதோடு பெங்களூருவில் நடைபெறும் தேசிய முகாமிலிருந்து அவரை கிளம்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்துக் கூறியுள்ள இந்தியத் தடகள அமைப்பின் அதிகாரி  ஒருவர்  “கோமதி மாரிமுத்துவின் முதல் சோதனை பாசிட்டிவ்” என்று வந்துள்ளது உண்மை என்று இவ்விவகாரத்தை உறுதி செய்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இவரது பயிற்சியாளர் ஜஸ்விந்தர் சிங் பாட்டியா,  நான் கோமதிக்கு சில காலம் மட்டுமே பயிற்சி அளித்தேன். அதன்பிறகு அவர்  தோஹா சென்று விட்டார். இது குறித்து எனக்கு தெரியாது' என்று கூறியுள்ளார்.
 
இச்செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கோமதி மாரிமுத்து, ‘இந்த குற்றச்சாட்டு குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் செய்தித்தாளில் தான்  பார்த்தேன். இது குறித்து விளக்கம் அளிக்கத் தடகள சம்மேளனத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். என் வாழ்நாளில் நான் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதே இல்லை. இந்த செய்தி முற்றிலும் தவறானது' என்கிறார்.