ஆஸ்திரேலிய அணியை விமர்சிப்பவர்களுக்கும் அணியின் திறன் குறித்து சந்தேகிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்லெஸ்பி பதிலடி கொடுத்துள்ளார். 

1987, 1999, 2003, 2007, 2015ம் ஆண்டு என 5 உலக கோப்பைகளை இதுவரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதுவரை அதிகமான முறை உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையுடன் ஆஸ்திரேலியா திகழ்கிறது. 

வலுவான அணியாக திகழ்ந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தற்போது ஆட்டம் கண்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான அவர்கள் இருவரும் இல்லாமல் புதிய கேப்டனின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. 

இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரை 5-0 என இழந்ததோடு, ஒரே ஒரு டி20 போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வேதனையுடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், சிதைந்து கிடக்கும் ஆஸ்திரேலிய அணியின் திறமை மீதான மதிப்பீடு குறைய தொடங்கியுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளாக உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆனால் அந்த அணியின் அண்மைக்கால மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி, அடுத்த உலக கோப்பையில் சோபிக்குமா? என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது. மேலும் அடுத்த உலக கோப்பை தொடர்பான பரபரப்பான வாதங்களில் இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள் குறித்து தான் விவாதங்கள் நடக்கின்றன. உலக கோப்பை தொடர்பான விவாதங்களில் ஆஸ்திரேலியா புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவை ஒரு பொருட்டாக நினைக்காத நிலைதான் தற்போது உள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் கில்லெஸ்பி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள கில்லெஸ்பி, ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய நிலை குறித்து அதிகமாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடுபவர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி காத்திருக்கிறது. அனைவரும் தற்போது இங்கிலாந்து அணியின் ஃபார்ம் குறித்தும் அந்த அணியின் வெற்றிகள் குறித்தும் பேசுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆச்சரியத்தை அளிக்கும். எப்படி திருப்பி அடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும் என கில்லெஸ்பி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.