UEFA EURO 2024: ஸ்காட்லாந்தை கதற வைத்த ஜெர்மனி – முதல் போட்டியிலேயே 4 கோல் வித்தியாசத்தில் வெற்றி!
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்துள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரானது ஜெர்மனியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஜெர்மனி நடத்துகிறது. மொத்ஹம் 24 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஜெர்மனி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல் அடித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி 3 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதே போன்று 2ஆவது பாதி ஆட்டத்திலும் 2 கோல் அடித்து ஸ்காட்லாந்து அணியை கதற வைத்தது. போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ளோரியான் விட்ஸ் முதல் கோல் அடித்தார். இதே போன்று 19ஆவது நிமிடத்தில் ஜமால் மூஸியலா 2ஆவது கோல் அடித்தார்.
44ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் 3ஆவது கோல் அடித்தார். ஆனால், ஸ்காட்லாந்து அடுத்தடுத்து வீரர்களை ரெட் கார்டு மூலமாக இழந்து குறைவான வீரர்களை வைத்து விளையாடியது. போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் 4ஆவது கோல் அடித்தார்.
கடைசியாக போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்காட்லாந்து தனது முதல் கோல் அடித்தது. இறுதியாக போட்டி நேரம் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி வீரர் 5ஆவது கோல் அடிக்கவே, 5-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி வாகை சூடியது. இதற்கு முன்னதாக கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடர்களில் குரூப் சுற்று பிரிவுகளுடன் ஜெர்மனி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.