தோனியின் தொடக்க காலத்தில் பாகிஸ்தானிடம் ஆடியது போல  இப்போதும் சிக்ஸர்களாக பறக்கவிட வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தோனி மந்தமாக ஆடியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இரண்டாவது போட்டியில் தோனி மந்தமாக ஆடியபோது, ரசிகர்கள் மைதானத்திலேயே கூச்சலிட்டு தோனியை கிண்டல் செய்தனர். ரசிகர்களின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

தோனியின் மந்தமான ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தோனிக்கு கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் ஆதரவுக்குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், தோனியால் இப்போதும் பழைய ஆட்டத்தை ஆட முடியும் எனவும், அதற்கு அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் எனவும் முன்னாள் கேப்டன் கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய கங்குலி, தோனி மிகச்சிறந்த வீரர். தோனியை ரசிகர்கள் ஏளனம் செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது. அவரைப்போல ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை மீண்டும் இந்திய அணி பெறுமா என்பது தெரியாது. அந்தளவிற்கு மிகச்சிறந்த வீரர் தோனி. அவர் சமீபகாலமாக அவரது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியாமல் திணறிவருகிறார். ஆனால் அவரது ஆட்டத்தை ஆட வேண்டும்.

நாங்கள்(இந்திய அணி) பாகிஸ்தானுக்கு சென்று ஆடியபோது, தோனி சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசினார். அவர் அதே மாதிரி இப்போதும் ஆட வேண்டும். அணி நிர்வாகம் தோனியுடன் அமர்ந்து பேச வேண்டும்.

6வது இடத்தில் இறங்கும் நீங்கள்(தோனி), அடிக்க வாய்ப்பு கிடைக்கும் பந்துகளை அடித்து ஆடுங்கள்; உங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடுங்கள் என ஆலோசனை கூற வேண்டும் என கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.