இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி. இக்கட்டான காலகட்டத்தில் அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதி சுற்று வரை அழைத்துச் சென்ற பெருமையை கொண்டவர் கங்குலி. இன்றைய இளம் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என்றால் அது மிகையாகாது. இத்தகைய சிறப்புகளை கொண்ட சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் புதிய தலைவராக கங்குலி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சவுரவ் கங்குலி முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டார்.செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வாகியுள்ளார். 

இவர்களுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஸ் ஜார்ஜ் இணைச் செயலராகவும், மஹிம் வர்மா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். 

ஐபிஎல் சூதாட்ட புகார் காரணமாக கடந்த 33 வாரங்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினோத் ராய் தலைமையிலான குழு பிசிசிஐயை நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.