இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக இன்று திகழும் தோனியின் தொடக்க கால கிரிக்கெட் வாழ்க்கை, சரியாக அமையவில்லை. 

கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2004ம் ஆண்டில் தோனி அறிமுகமானார். அப்போது, தோனி 7வது இடத்தில் தான் களமிறக்கப்பட்டார். ஆனால் அந்த வரிசையில் அவர் சரியாக ஆடவில்லை. அதன்பிறகு தோனிக்கு அணியில் இடமளிப்பது ஒரு விவகாரமாக எழுந்தது. 

ஆனால் தோனியின் திறமை மீது கங்குலி நம்பிக்கை வைத்திருந்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கங்குலியின் நம்பிக்கையை காப்பற்றியதோடு, தோனியின் கிரிக்கெட் வாழ்வில் முக்கியமான இன்னிங்ஸாகவும் அது அமைந்தது. 

6 போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் போட்டியில் 7ம் வரிசையில் களமிறங்கி 3 ரன்கள் மட்டுமே அடித்த தோனியை, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், தான் இறங்க வேண்டிய மூன்றாம் வரிசையில் களமிறக்கிவிட்டார் தோனி. பாகிஸ்தானின் பந்துவீச்சை பறக்கவிட்ட தோனி, 148 ரன்களை குவித்தார். 

தனது திறமையை நிரூபித்த தோனி, அதன்பிறகு இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தார். பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கங்குலி, இதுதொடர்பாக விளக்கமளித்தார். 

தோனி குறித்து பேசிய கங்குலி, தோனியின் திறமை எனக்கு தெரிந்தது. அவரது திறமையை வெளிக்கொண்டுவர நினைத்தேன். அதனால் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கிவிட நினைத்தேன். பொதுவாக அவர் 7ம் வரிசையில் களமிறங்குவதால் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்திருந்தார். நான் அவரிடம், மூன்றாம் வரிசையில் களமிறங்க சொன்னேன். உடனே அவர் என்னிடம், நீங்கள் இறங்கவில்லையா? என்றார். நான் நான்காம் வரிசையில் களமிறங்குகிறேன்; நீங்கள் மூன்றாமிடத்தில் களமிறங்குங்கள் என்று கூறினேன். மூன்ம்றாம் வரிசையில் களமிறங்கிய தோனி, 148 ரன்களை குவித்தார். 

முன்வரிசையில் களமிறங்க வைப்பதன் மூலம் தான் இளம் வீரர்களை வளர்த்தெடுக்க முடியும் என நான் நம்புகிறேன். பின் வரிசையில் இறக்குவதன்மூலம் ஒரு வீரரின் திறமையை கண்டறிய முடியாது என கங்குலி தெரிவித்தார்.