முன்னாள் கேப்டன் தோனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை சிறப்பாக கேப்டன் கோலி கையாள்வதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. தனது கூலான அணுகுமுறையால் நெருக்கடியான சூழல்களை பதற்றமடையாமல் சமயோசிதமாக கையாண்டு வெற்றியை பறிக்கும் வல்லமை வாய்ந்தவர். இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வுபெற்றபிறகு கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் அணிக்கு கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தோனியும் கேப்டனாக இருந்தனர். வெவ்வேறு விதமான போட்டிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதை விரும்பாததால் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு அனைத்துவிதமான போட்டிகளின் இந்திய அணிக்கும் கோலியே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தோனி ஒரு வீரராக ஆடிவருகிறார்.

எனினும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணங்களில் சீனியர் வீரர் என்ற முறையிலும் முன்னாள் கேப்டன் என்ற முறையிலும் தோனி ஆலோசனைகளை வழங்குகிறார். கோலியும் அதை பின்பற்றுகிறார். இது ஆரோக்கியமான நிகழ்வு. இதற்கு முன்னதாக இப்படியான ஆரோக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தது கிடையாது. முன்னாள் கேப்டன்கள் நடப்பு கேப்டன்களால் ஓரங்கட்டப்படுவதுதான் இயல்பு. ஆனால் கோலி, தோனியின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதோடு, அவருக்கான மரியாதையையும் உரிய விதத்தில் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், தோனி - கோலி இடையேயான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, கோலி ஒரு மிகச்சிறந்த கேப்டன். அவரது அணி எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார். முன்னாள் கேப்டன் தோனியை சிறப்பாக கையாள்கிறார் கோலி. முன்னாள் கேப்டன்களை நடப்பு கேப்டன்கள், மழுங்கடிப்பதுதான் வழக்கம். ஆனால் தோனி இன்னும் அணியில் மிக முக்கியமான வீரர் தான் என்ற நம்பிக்கையை கோலி வழங்குகிறார்.

தோனி மிகச்சிறந்த வீரர். அதிகமான போட்டிகளில் ஆடிய அனுபவமும் கேப்டன்சி அனுபவமும் பெற்றவர். அடுத்த உலக கோப்பை வரை இந்திய அணியில் தோனியின் பங்கு முக்கியமானது என கங்குலி தெரிவித்தார்.