இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக நன்றாக ஆட வேண்டும் என்பதை நினைத்து கோலி பயந்திருக்கலாம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பையும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடுவது, இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும்.

எனவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு கேப்டன் கோலிக்கும் முக்கியம்.

கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10 இன்னிங்ஸிலும் சேர்த்தே கோலி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே இந்த தொடரில் இங்கிலாந்து மண்ணில் கோலி சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது. 

எனவே இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அங்கு நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் கலந்துகொண்டு ஆட கோலி திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரின்போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதால், கவுண்டி கிரிக்கெட்டில் கோலி ஆடவில்லை. 

எனினும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடாததும் நல்லதுதான். அதனால்தான் போதிய ஓய்வுடன் உடற்தகுதியை மேம்படுத்த முடிந்தது என கோலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இங்கிலாந்து தொடர் தொடர்பான கோலியின் மனநிலை குறித்து பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி தலைசிறந்த வீரர். இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இங்கிலாந்து தொடருக்கு முன் அவர் கவுண்டி போட்டியில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பயம் கோலியிடம் இருந்தது. அதனால் இம்முறை இங்கிலாந்தில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக கவுண்டி போட்டிகளில் ஆட முனைப்பு காட்டினார். 

அவர் கவுண்டி போட்டியில் ஆடாவிட்டாலும் இந்த தொடரில் சிறப்பாக ஆடுவார். இந்திய அணி தொடரை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து அணியும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்த தொடர் சவால் மிக்கதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார்.