20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கால்பந்து உலக கோப்பையை வென்றுள்ளது பிரான்ஸ் அணி. 

பிரான்ஸ் - குரோஷியா அணிகளுக்கு இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கோப்பையை இரண்டாவது முறையாக தட்டி சென்றது பிரான்ஸ் அணி. 

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. லீக்கில் 32 அணிகள் மோதின. அவற்றில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி, இந்த முறை லீக்கிலேயே வெளியேறியது. 

நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதின. அர்ஜெண்டினா, போர்ச்சுகல் ஆகிய ஜாம்பவான் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறின. காலிறுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், உருகுவே, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் வெளியேறின. 

அரையிறுதியில் இங்கிலாந்தை குரோஷியாவும், பெல்ஜியத்தை பிரான்ஸும் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. கடந்த 1998ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ், முதல் முறையாக கோப்பையை வென்றது. 

20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை செய்தன. 1998ல் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுத்து முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் குரோஷியாவும், இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்ஸும் களம்கண்டன. 

போட்டி தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்த முயன்றனர். போட்டி தொடங்கிய 18வது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. 

பின்னர் குரோஷிய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதன் விளைவாக 28வது நிமிடத்தில் அதன் இவான் பெரிஸிக் கோல் அடித்தார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 38வது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. 

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 59வது நிமிடத்தில் ஒரு கோல், 65வது நிமிடத்தில் ஒரு கோல் என அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். 68வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ ஒரு கோல் அடித்தார்.

அதன்பிறகு குரோஷிய வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை இரண்டாவது முறையாக தட்டி சென்றது. கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.261 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற குரோஷிய அணிக்கு ரூ.191 கோடி ரொக்கப் பரிசளிக்கப்பட்டது.