அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சீனியர் வீரரான தோனியின் செயல், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல், ரெய்னா, பாண்டியாவின் அபார பேட்டிங் மற்றும் குல்தீப், சாஹலின் அசத்தல் பவுலிங்கால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும் என கோலி முன்னரே தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்றைய போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. 

தவானுக்கு பதிலாக ராகுல், தோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவிற்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். 

இந்த போட்டியில் தோனி விளையாடாத நிலையில், அவரது பெருந்தன்மை வாய்ந்த செயல், அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ராகுல், ரெய்னா ஜோடி அதிரடியாக பேட்டிங் செய்தது. அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். 

அவர்கள் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கிட்பேக் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் மைதானத்திற்குள் வந்த தோனி, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். தோனி மைதானத்திற்குள் வந்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். வீரர்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, ரசிகர்களை பார்த்து புன்னைகைத்துவிட்டு தோனி சென்றுவிட்டார்.

பொதுவாக அணியில் இடம்பெற்றுள்ள ஆனால் ஆடும் லெவனில் இல்லாத இளம் வீரர்களே தண்ணீர் எடுத்து செல்வர். ஆனால் இந்திய அணிக்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்த முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, ஈகோ பார்க்காமல் பெருந்தன்மையுடன் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து சென்ற செயல், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் குவித்து வருகிறது. 

தோனியின் பெருந்தன்மை கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளது.