44 வருடத்திற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி தோற்றது குறித்த நிகழ்வை பகிர்ந்து அதைவிட தற்போதைய தோல்வி மோசமானது என முன்னாள் வீரர் ஃபரோக் என்ஜினியர் விமர்சித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் வீசிய ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து படுதோல்வி அடைந்தனர். இந்த போட்டி முழுவதுமே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி, இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஒருமுறை கூட வரவில்லை. 

லார்ட்ஸ் போட்டியின் தோல்வி குறித்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு அதே மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோற்றதை நினைவுகூர்ந்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் ஃபரோக் என்ஜினியர்.

இதுதொடர்பாக பேசிய அவர், 1974ல் நாங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியபோது, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றோம். ஆனால் முதல் இன்னிங்ஸில் 302 ரன்கள் எடுத்தோம். நான் தான் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தேன். கவாஸ்கர் 49 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றோம். இந்திய அணி லார்ட்ஸில் தற்போது அடைந்திருக்கும் தோல்விக்கு, நாங்கள் அடைந்த தோல்வி பரவாயில்லை. ஏனென்றால், நாங்கள் போராடினோம். முதல் இன்னிங்ஸில் முடிந்தவரை போராடி 302 ரன்கள் குவித்தோம். ஆனால் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் போராடவேயில்லை. அதனடிப்படையில், அந்த தோல்வியே பரவாயில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

சேவாக்கும் இந்திய அணி போராடாமல் தோல்வியடைந்ததைத்தான் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபரோக் என்ஜினியர் நினைவுகூர்ந்துள்ள அந்த குறிப்பிட்ட போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 629 ரன்களை குவித்தது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆல் அவுட். ஃபாலோ ஆன் பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 42 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

அந்த போட்டியை நினைவுகூர்ந்து, தற்போதைய தோல்வியைவிட அதுவே பரவாயில்லை என ஃபரோக் கருத்து தெரிவித்துள்ளார்.