இரட்டை சதமடித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான், சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில், இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 

நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். 210 ரன்களை குவித்தார் ஃபகார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் 6வது வீரர் என்ற பெருமையையும் ஃபகார் பெற்றுள்ளார். ஃபகார் இரட்டை சதமடிப்பதற்கு முன்னதாக, சயீத் அன்வர் அடித்த 194 ரன்களே பாகிஸ்தான் வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

இந்த இரட்டை சதத்தின் மூலம், சச்சின், சேவாக், ரோஹித், கப்டில், கெய்ல் ஆகியோரின் பட்டியலில் ஃபகாரும் இணைந்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் ஒரு காலத்தில் இரட்டை சதம் என்பது கனவாக இருந்தது. ஆனால் சச்சின், சேவாக், ரோஹித், கப்டில், கெய்ல் ஆகியோர் அதையும் சாத்தியப்படுத்தி காட்டினர். அதிலும் ரோஹித் சர்மா, மூன்று முறை இரட்டை சதம் விளாசி மிரட்டினார். 

இரட்டை சதம் அடிப்பது சாத்தியம் என்று ஆகியபிறகும், ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இரட்டை சதம் அடிக்காமல் இருப்பது அந்த அணியின் முன்னாள் வீரர்களுக்கு கூட மனக்குறையாக இருந்தது. அதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா வெளிப்படையாகவே தெரிவித்தார். ஜிம்பாப்வேயிடம் கூட அடிக்கவில்லை என்றால் வேறு எந்த அணியிடம் இரட்டை சதமடிப்பது? ஏன் பாகிஸ்தான் வீரர்கள் இரட்டை சதம் அடிக்க முயற்சி செய்வதில்லை? என கேள்வி எழுப்பியிருந்தார். 

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும், ஃபகார் ஜமானிடம் இரட்டை சதமடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இவ்வாறு ரமீஸ் ராஜா, மிக்கி ஆர்தர் ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் ஃபகார் ஜமான். அதை அவரே தெரிவித்துள்ளர். 

நேற்றையை போட்டி முடிந்ததும் பேசிய ஃபகார் ஜமான், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் என்னிடம் டாஸ் போடுவதற்கு முன், டாஸ் வென்றால் பேட்டிங் செய்யப்போகிறோம். அப்படி ஒருவேளை நாம் முதலில் பேட்டிங் செய்தால் நீ இரட்டை சதமடிக்க வேண்டும் என்று கூறினார். இரண்டு நாட்களுக்கு முன்பும் அதையே சொன்னார். அவர் என்ன நினைத்து சொன்னார் என்று தெரியவில்லை. நான் இரட்டை சதமடித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.