பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான், 38 ஆண்டுகால கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக அறிமுகமானார் ஃபகார் ஜமான். அறிமுக தொடரிலேயே அசத்தாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக சதமடித்து, அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல காரணமாக திகழ்ந்தார். அதன்பிறகு அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார்.

 

அபாரமாக பேட்டிங் செய்யும் ஃபகார் ஜமான், ஒவ்வொரு சாதனையாக நிகழ்த்திவருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஃபகார் இரட்டை சதம் விளாசினார். 210 ரன்களை குவித்த ஃபகார், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். 

அதன்பிறகு நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக ஆடி 85 ரன்களை குவித்தார். இந்த போட்டியில், 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒரு பவுண்டரி அடித்த ஃபகார், ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஃபகார் படைத்துள்ளார். 

இந்த போட்டி ஃபகார் ஜமானுக்கு 18வது போட்டி. 18வது ஒருநாள் போட்டியிலேயே 1000 ரன்களை கடந்துவிட்டார் ஃபகார் ஜமான். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், 1980ம் ஆண்டில், 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதை ஃபகார் ஜமான் முறியடித்துள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸைப் போலவே இங்கிலாந்து வீரர்கள் பீட்டர்சன், டிராட், தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக், பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் ஆகியோரும் 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளனர். 

ஆனால் வெறும் 18 போட்டிகளிலேயே 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் ஃபகார். இவர் மேலும் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபகார் ஜமான் இதே ஃபார்மில் தொடர்ந்து ஆடினால், எதிர்காலத்தில் அவர் கோலியின் சாதனைகளையும் சேர்த்து முறியடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு தொடர்ச்சியாக இதேபோன்று சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.