இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. சொதப்பலான பேட்டிங்கின் காரணமாக வெற்றியின் விளிம்பு வரை சென்ற இந்திய அணி, தோல்வியடைந்தது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியிருக்க வேண்டும். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று போட்டி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், நேற்று முழுவதும் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடப்படவில்லை. 

இந்நிலையில், இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் பேட்டிங் ஆடுகிறது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக் கிறிஸ் வோக்ஸும், டேவிட் மாலனுக்கு பதிலாக போப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாத தவான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் தொடக்க வீரர்களாக முரளி விஜயும் ராகுல் களமிறங்குகின்றனர். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.