இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அதன்பிறகு ஒருநாள் தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 269 ரன்கள் என்ற இலக்கை ரோஹித்தின் அதிரடியால் எளிதாக எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி.

இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இலக்கை விரட்டுவதில் இந்திய அணி வல்லமை வாய்ந்தது என்பதை அறிந்தும் கூட முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடும். ஆனால் இந்தியாவை தொடரை வெல்ல விடக்கூடாது என்ற உறுதியில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து ஆடிவருகிறது.

கடந்த முறை குல்தீப்பின் பவுலிங்கை மட்டும்தான் ஆட முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. நன்றாக பேட்டிங் ஆடிய இங்கிலாந்தை சரித்தது குல்தீப் தான். அதனால் தான் 268 ரன்களில் ஆல் அவுட்டானது. குல்தீப் மட்டுமே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் குல்தீப்பின் பவுலிங்கை சமாளித்து ஆடிவிட்டால் அதிகமான ஸ்கோரை எட்டலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யலாம்.

அதே நேரத்தில் எவ்வளவு கடினமான இலக்கை விரட்டுவதிலும் இந்திய வீரர்கள் கைதேர்ந்தவர்கள். அதிலும் ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மூன்று பேருமே பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடியவர்கள். மேலும் சேஸிங் மாஸ்டர் கோலி, இலக்கை விரட்டுவதில் சிறந்த வீரர். இவ்வளவும் தெரிந்தும் இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.