முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு, இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்து பழிதீர்த்துள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் கடந்த போட்டியை போலவே ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பேர்ஸ்டோ 38 ரன்களிலும் ராய் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையுமே குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க செய்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட், இயன் மோர்கன் சிறப்பாக ஆடினர். இருவருமே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் கடந்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், 53 ரன்களில் குல்தீப்பின் பவுலிங்கில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மோயின் அலியும் 13 ரன்களில் அவுட்டானார்.

பிறகு களத்திற்கு வந்த டேவிட் வில்லி, கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியின் ரன் உயர்விற்கு உதவினார். ஜோ ரூட் பொறுப்பாக ஆடி சதமடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய வில்லி, 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 322 ரன்களை குவித்தது.

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாகவும் ரோஹித் சர்மா நிதானமாகவும் ஆட்டத்தை தொடங்கினர். ரோஹித் சர்மா 15 ரன்களிலும், அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 36 ரன்களில் அவுட்டாகினர். இதையடுத்து களமிறங்கிய ராகுல், 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார். முதல் மூன்று விக்கெட்டுகளை 11 ஓவருக்கு உள்ளாகவே இழந்தது இந்திய அணி.

இதையடுத்து கோலியும் ரெய்னாவும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்ததோடு, விக்கெட் வீழாமலும் பார்த்துக்கொண்டனர். எனினும் கோலி 45 ரன்களிலும் ரெய்னா 46 ரன்களிலும் வெளியேறினர். அதன்பிறகு பாண்டியா, உமேஷ், சித்தார்த் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுனையில் ஆடிய தோனி, இலக்கை விரட்டுவதற்கான ஆட்டத்தை ஆட முற்படவேயில்லை. இலக்கை அடைய தேவையான ரன் ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தோனியும் அவுட்டாக, குல்தீப்பும் சாஹலும் 50 ஓவர் வரை ஆடினர். கடைசி பந்தில் சாஹல் 12 ரன்னில் அவுட்டனார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது.  ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.