இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் சேர்த்தது. 

13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை அஷ்வினும் இஷாந்த் சர்மாவும் சேர்ந்து சரித்தனர். அந்த அணியின் சாம் கரண் மட்டும் நிலைத்து ஆடி 63 ரன்கள் அடித்தார். அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முரளி விஜய், ராகுல், தவான், ரஹானே, அஷ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலியும் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் இருந்தனர்.

நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரிலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டானார். அதன்பிறகு அரைசதம் கடந்த கோலி, 51 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசியாக ஹர்திக் பாண்டியாவும் உமேஷ் யாதவும் மட்டும் களத்தில் இருந்தனர். ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் முதல் ஸ்லிப்பில் நின்ற குக்கிடம் கேட்ச் கொடுத்து பாண்டியா அவுட்டானார். இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. பேட்டிங்கில் விராட் கோலியை மட்டுமே நம்பியிருப்பது அணிக்கு நல்லதல்ல என்பதை இந்த போட்டி மீண்டும் ஒருமுறை செவிட்டில் அறைந்து பறைசாற்றியுள்ளது.