இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால், சவுத்தாம்ப்டனில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில், 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி பெற, 3வது போட்டியில் எழுச்சி பெற்று இந்தியா, 203 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பும்ரா பந்துவீச்சில், ரன் எடுக்காமல், ஜென்னிங்ஸ் பெவிலியன் திரும்பினார். குக், 17 ரன்கள் எடுத்த போது, பாண்டியா பந்தில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. 

அதன் பிறகும் இங்கிலாந்து அணியின் சரிவு தொடர்ந்தது. இறுதியில், 76.4 ஓவரில், 246 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் 23, பட்லர் 21, அலி 40, ரஷீத் 6, பிராட் 17 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக குர்ரன், 78 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில், சிறப்பாக பந்து வீசி, பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெடுகளை கைப்பற்றினர். பாண்டியா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.