இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என ஆஸ்திரேலிய அணி இழந்துள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், இந்த படுதோல்வி ஆஸ்திரேலிய அணிக்கு கடும் மன உளைச்சலை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சீனியர் வீரர்களான அவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திணறுவதோடு, தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளிலும் தோற்று, ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. 

இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 481 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை அடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 242 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு வரலாற்று படுதோல்வியை பரிசாக வழங்கியது. நான்காவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்ததன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானுக்கு பின்னால் செல்லும் அளவிற்கு பின்னடைவை ஆஸ்திரேலிய அணி சந்தித்தது. தற்போது ஐசிசி தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ளது. 

கடைசி போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் எண்ணத்தை தகர்த்திவிட்டார் பட்லர். கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 206 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களை அடுத்தடுத்து அவுட்டாகினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். ஆனால் பட்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடி, சதமடித்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். அதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.

அதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என இங்கிலாந்து வென்றுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதது அந்த அணிக்கு நேர்ந்த சோகம். இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒயிட் வாஷ் ஆவது இதுதான் முதல் முறை. இதற்கு முன்னதாக இங்கிலாந்திடம் அனைத்து போட்டிகளிலும் தோற்று ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்ததே இல்லை. 

இன்னும் ஓராண்டில் உலக கோப்பையை வைத்துக்கொண்டு வரலாற்று படுதோல்வியை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.