இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. முதலில் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. 

அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க உள்ளதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. எனவே டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

அதே நேரத்தில், ஒருநாள் தொடரும் முக்கியமானது. ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன. இயன் மோர்கன் தலைமையீலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த அணியாக திகழ்கிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து அனுப்பியது.

அதேநேரத்தில் இந்திய அணியும் கோலி, ரோஹித், தவான், ராகுல், ரெய்னா, தோனி என சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாக திகழ்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப், சாஹல் என பவுலிங்கிலும் வலுவான அணியாகவே இந்தியா உள்ளது. 

எனவே வலுவான இரண்டு அணிகள் மோதும் போட்டி என்பதால் இங்கிலாந்து தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து ஒருநாள் அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), மோயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், டாம் குரான், பிளங்கெட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, அடில் ரஷீத், மார்க் உட்

இந்திய ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, தவான், ராகுல், ரெய்னா, தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், சாஹல், குல்தீப் யாதவ்