இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை தனி நபராக மீட்டெடுத்த கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளன. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 100 ரன்களுக்கு உள்ளாகவே, முரளி விஜய், ராகுல், தவான், ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி, சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

149 ரன்கள் குவித்த விராட் கோலி, கடைசி விக்கெட்டாக அவுட்டானார். கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 274 ரன்களை சேர்த்தது.

தனி நபராக போராடி இந்திய அணியை மீட்டெடுத்த விராட் கோலியை இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளன. 

தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், விராட் கோலி ஹீரோவாக தனி நபராக களத்தில் நின்று மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார் என புகழ்ந்துள்ளது. 

டெய்லி மெய்ல் நாளிதழ் செய்தியில், இந்தியா இங்கிலாந்து இடையேயான ஹெவி வெய்ட் சாம்பியன் போட்டியில் இந்தியா சிறப்பான பஞ்ச் கொடுத்துள்ளது. விராட் கோலி ஒற்றை ஆளாக சிறப்பாக ஆடினார். இது அவருக்கான நாள் என புகழ்ந்து எழுதியுள்ளது. 

டெலிகிராப் நாளேடு வெளியிட்ட செய்தியில், சாம் கரன் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கண்ணீர்விட வைத்தார். ஆனால், மாஸ்டராக மாறிய விராட் கோலி, சதமடித்து அணியைக் காத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளது.