இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. குக் மற்றும் ஜென்னிங்ஸின் விக்கெட்டுகளை இஷாந்த் மற்றும் ஷமி வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், இரண்டாம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

லார்ட்ஸ் ஆடுகளம் புற்களுடன் இருந்ததால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனவே முதலில் பேட்டிங் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிலும் அதிக அனுபவமிக்க பவுலரான ஆண்டர்சனின் பந்துவீச்சை எதிர்கொள்ள மோசமாக திணறினர். தனது அனுபவத்தையும் ஆடுகளத்தின் தன்மையையும் நன்றாக பயன்படுத்திக்கொண்ட ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 107 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரர்களான குக் 21 ரன்களிலும் ஜென்னிங்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். குக்கின் விக்கெட்டை இஷாந்த் சர்மாவும் ஜென்னிங்ஸின் விக்கெட்டை முகமது ஷமியும் வீழ்த்தினர். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் போப் ஆகிய இருவரும் ஆடிவருகின்றனர். 

2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களுடன் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. முதல் இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்திவிட்டாலும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது அவசியம்.